September 2016 - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Wednesday, 7 September 2016

சூத்திரர் வேதம் ஓதலாம் என்பதே சைவத்தின் கருத்து

September 07, 2016 0
முஸ்லிம்கள்,கிருத்தவர்,திராவிட நாத்திகர்கள் "சூத்திரர்கள் வேதத்தை ஓதக் கூடாது என்று ஒதுக்கப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள்,இஸ்லாத்திலும் கிருத்தவத்திலும் தான் குரான்,பைபிளை அனைவரும் ஓதலாம்" என்று சொல்லி மக்களைக் குழப்பி வருகின்றனர்.இந்தப் புரட்டு வாதத்திற்கு,14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ,ஸ்ரீஅருள் நந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞானசித்தியார் என்ற சைவ சித்தாந்த சாஸ்திரம் பதிலடிக் கொடுக்கிறது :


முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழியும் சொல் ஆரிய மெனில்
கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து)
ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம்
அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே.-  (சிவஞானசித்தியார்  பரபக்கம் : 199)


ஸ்ரீ தத்துவப்பிரகாசர் உரை :

ஆரியமாகிய வேதமே கேடில்லாத பிரம க்ஷத்திரிய வைசியர் என்னும் மூன்று சாதியும் ஓதுஞ்சொல்லென்று நீ சொல்லின், ஏனைய வருணத்துள்ளாராய்ச் சோதிடஞ் சொல்லுமவர்கள் வேதத்துக்கங்கமாகிய சாத்திரத்தை ஓதாமல் அறியும்படி எங்ஙனம்? அஃதன்றியும், இந்தத் தீவின் வடகூற்றினுள்ளார் மற்ற வருணத்தார் வேதத்தை ஓதத் தகாரென்று நீக்கப்படாமல் எல்லாராலும் ஓதப்படுவானேன்? ஆதலால் நீக்கப்படாதாயிற்று.........

அடியேனின் எளிய உரை : பிராமணர்,க்ஷத்திரியர்,வைஸ்யர் என்ற மூன்று வர்ணத்தவர் மட்டும் வேதத்தை ஓதலாம் என்று நீ சொன்னால், மற்றைய வர்ணத்தைச் சார்ந்த ஜோதிடம் சொல்பவர்கள், வேதத்தின் (ஆறு) அங்க நூல்களை கற்காமல் எப்படி   அறிந்துக்கொள்ள முடியும் ? மேலும்,வடதேசத்தில் (வட இந்தியா) மற்றைய வர்ணத்தவர் நீக்கப்படாமல்,அனைவராலும் வேதம் ஓதப்படுகிறதே,ஏன் ?  ஆதலால் வேதம் (அனைவருக்கும் ) பொது.

28 சிவாகமங்களையும் கரைத்துக் குடித்து "சகலாகமப் பண்டிதர்" என்ற பட்டத்தை உடையவர் ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார்.ஸ்ரீ கைலாச குருப்பரம்பரை எனும் சைவ சித்தாந்த ஞானப்பரம்பரையின் இப்பூமியில் முதல் ஆச்சாரியரான (முதல் புறச்சந்தானக் குரவர்) ஸ்ரீ மெய்கண்ட தேசிகரின் நேரடி சிஷ்யர்,ஸ்ரீ அருள் நந்திசிவாச்சாரியார்.இவ்வளவு பெருமை பெற்ற அவரே இக்கருத்தைச் சொல்லிவிட்டார் என்றால்,வேறு ஆதாரமும் வேண்டுமோ ?

"சிவத்திற்கு மேல் தெய்வமில்லை, சித்திக்கு மேல் நூல் இல்லை” என்று சாண்றோரால் புகழ்ப்பட்ட சிவஞான சித்தியாரில், ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியார் கூறிவிட்டார் என்றால்,அது நிச்சயம் வேத சிவாகமத்தின் கருத்தே என்பது திண்ணம்.

மேலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்,ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் போன்ற பெரும் சைவப் பண்டிதர்கள் சூத்திரர்கள் தானே ? அவர்கள் நூல்களில் வேத வசன மேற்கோள்கள் நூற்றுக்கணக்கில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறதே ?

ஆக,சூத்திரரும் வேதம் ஓதலாம் என்பதே சைவத்தின் கருத்து.

Read More

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்