"எம்மதமும் சம்மதம்" எனும் குருட்டு வாதத்துக்கு கண்டனம் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Tuesday, 11 April 2017

"எம்மதமும் சம்மதம்" எனும் குருட்டு வாதத்துக்கு கண்டனம்

                                                         


                                                        || சிவாத்பரதரம் நாஸ்தி ||

ஹிந்துக்களில் பெரும்பான்மையினர் "எம்மதமும் சம்மதம்" என்று கூறிவருகின்றனர்.அதனால் வெள்ளியன்று தர்க்காவிலும்,ஞாயிறு அன்று சர்ச்சிலும் மண்டியிட தவறுவதில்லை.அவ்வளவு ஏன்,பூஜை அறையில் ஏசு படம் போன்றவற்றையும் வைத்து வழிபடுகின்றனர்.இது சமீபத்தில் உருவான முட்டாள் தனமான சமய விபச்சாரமே அன்றி இதற்கு எந்த சைவ,வைணவ நூல்களிலும் ஆதாரம் இல்லை.சிலர் வேதத்தில் உள்ள சில வாக்யங்களை நம் முன் நீட்டி,இந்த அபிப்பிராயத்தை நிலை நாட்டப் பார்க்கின்ரனர்.அவர்கள் காட்டும் வேத வாக்யம் :

"இந்திரன்,மித்ரன்,வருணன்,அக்னி,திவ்யன்,சுபர்ணன்,கருத்மான்... முதலிய பல பெயர்களால் அறிவாளிகள் கடவுளைச் சொல்லுகிறார்கள்,ஆயினும் கடவுள் ஒருவரே" - ரிக் வேதம் 1/164/46

இந்த வேத வாக்யத்தின் உட்கருத்துப் புரியாமலேயே பலர் இதனைப் பயன்படுத்துகின்றனர்.இறைவனௌக்கு சிவன்,ருத்திரன்,அக்னி,இந்திரன்,விஷ்ணு என்று பலப் பெயர்கள் உண்டு.ரிஷிகள் இப்படி இறைவனைப் பலப் பெயர்களால் வேதத்தில் அழைத்துள்ளனர்.இந்தப் பலப் பெயர்கள்,இறைவனால் படைக்கப்பட்ட தேவர்களைக் குறிப்பவை அல்ல என்பதை விளக்கவே வேதம் இப்படியோர் விளக்கத்தை கொடுத்துவிடுகிறது.

தேவர்களிலும் இந்திரன்,விஷ்ணு,ருத்ரன்,அக்னி எனும் பெயருள்ளவர்கள் இருக்கிறார்களே ,வேதம் அவர்களைக் குறிப்பதாக ஏன்  இருக்கக் கூடாது என்று கேட்கலாம்.ஓர் உதாரணம் கூறுகிறேன்.மனிதரில், ஈஸ்வரன்  என்று பலர் பெயர் வைத்துள்ளார்கள். ஆதலால் இவர்கள் தான் இறைவனா ? இல்லை தானே ? அந்தப் பெயர் மனிதர்களுக்கு இரவல் தானே ? இறை நாமத்தை வைத்துக்கொண்டனர்,அவ்வளவே.அதே போல் தான் இந்திரன்,விஷ்ணு,அக்னி போன்றவை தேவ பதவிகளின் பெயர்கள்.பெரும்புண்ணியம் செய்த ஆத்மா,இந்திர,விஷ்ணு போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றன.இப்படி பல கோடி ஆத்மாக்கள் விஷ்ணு,பிரம்ம,இந்திர பதவிகளுக்கு வந்து போயுள்ளன.இறைவன்,தன் நாமங்களான இந்திரன்,விஷ்ணு போன்றவற்றை,தேவர்களுக்கு சூட்டியுள்ளார்.அவ்வளவே.மற்றபடி,அந்தப் பெயர்களுக்கு உரிய உண்மையான உரிமையாளன் இறைவன் மட்டுமே.


ஆக,இந்த மந்திரத்தின் உண்மையான விளக்கத்தைப் பார்த்தோம்.வேதம் எல்லா மதங்களும் ஒன்று என்று சொல்லவில்லை என்பதற்கு மேலும் சில ஆதாரங்களைப் பார்ப்போம் :

1) "அந்த ருத்ரனுக்கு மேலான பதியுமில்லை : ரக்ஷகனும் இல்லை : உற்பத்தி ஸ்தானமும் இல்லை : அவனே காரணன் : அவனே காரணாதிபதிகளுக்கு அதிபன் : அவனை பிறப்பிக்கின்றவனும் ,அவனுக்கு அதிபனும் இல்லை " - ஸ்வேதாஸ்வதார உபநிஷத்

2) "ஏகோ ருத்ர ஏக ஏவருத்ரோ நத்விதீயாயதஸ்துர்ய" -அதர்வசிர உபநிஷத்

பொருள் : சர்வகர்த்தாவான ருத்திரன் ஒருவனே உளன் : இரண்டாமவன் உளன் என யாரும் ஒருபடுகின்றிலர்

3) "சம்சார துக்க நாச முக்திப்ராப்தியின் பொருட்டு விஷ்ணு முதலிய சர்வதேவர்களையும் விட்டு எப்பொழுதும் தியேயனாகவுள்ள சிவனையே தியானிக்க வேண்டும்" -சரப உபநிஷத்

இந்த மூன்று வேதப் பகுதிகளான உபநிஷதங்கள்,ஏக இறைவனாக பரசிவத்தை மட்டுமே வர்ணித்து,அவனை மட்டுமே வணங்கச் சொல்கிறது.பிற தேவர்களான விஷ்ணு,பிரம்மா போன்றோரை வணங்குவதால் முக்தி இல்லை என்கிறது.அப்படியிருக்க எங்ஙனம் எல்லா மதத்தின் தெய்வங்களையும் வணங்கலாம் என்று நவீன ஹிந்துக்களில் பலர் கூறுகின்றனர் ? எல்லா சமயங்களின் தெய்வங்களும் ஒன்று என்று வேதம் கூறுவதாக ஒரு ஆதாரத்தை எடுத்து வைக்க முடியுமா ? இந்த சவாலை ஹிந்துக்கள் ஏற்கத் தயாரா ?

இன்னும் சிலர், " வேதத்தில் இறைவனாகக் கூறப்படும் சிவன் ஏன் அல்லா,ஏசுவாக இருக்கக் கூடாது ? சிவன்,அல்லா,ஏசு இவர்கள் மூவரும் ஒருவராக இருக்கலாமே,அதனால் சிவனை வேதம் வணங்கச் சொல்வதால்,அல்லாவையும் ஏசுவையும் வணங்கலாம் என்று அர்த்தமாகிறதே ? " என்று சிலர் கேள்விகளைக் கேட்கலாம். இதற்கும் வேதம் மற்றும் பிற சைவ சாஸ்திரங்கள் பதில் அளிக்கின்றன.

1. "கோமோஷோபாய :" (மோக்ஷத்துக்கு உபாயம் எது ?)
    "விபூதி தாரணா தேவ : " (விபூதி தாரணமே அதற்குபாயம் ) -ஜாபாலோபநிஷத்

2. "பரமஹம்ஸாநாமஸம்வர்த்த காருணி ச்வேதகேது ருபுநிதாக ஜடபரததத்தாத்ரேய ரைவதகபுஸுண்டப்ரப்ருதயோவிபூதிதாரணாதேவமுக்தா :ஸ்யு : ஸஏஷ பஸ்மஜ்யோதி ரிதிவை யாஜ்ஞவல்க்ய :| "
(பரமஹம்ஸ ஸந்நியாஸிகளான சம்வர்த்தகாருணி, ஸ்வேதகேது,  துர்வாஸர்,ரிபு,நிதாகர், ஜடபாதர்,தத்தாத்ரேயர், ரைவதகர்,புஸுண்டர் முதலானவர்கள் விபூதியை தரித்ததாலேயே, மோக்ஷத்தையடைந்தவர்களானார்கள்...அப்படிப்பட்ட இந்த யஜ்ஞவல்கியரும்  பஸ்மஜ்ஜோதியென்று  பெயர் பெற்றார் ) - ப்ருஹஜ்ஜாபால உபநிஷத்

3."திரிபுண்டரத்தை நிந்திக்கிறவர் எவரோ,அவர் சிவனையே நிந்திக்கிறவர் ஆவர்.அதனை எவர் தரிக்கின்றனரோ,அவர் சிவனையே தரிக்கின்றவர் ஆவர்" - ப்ருஹத் ஜாபால உபநிஷத்".

4."சிவம்..ஹரிஹர ஹிரண்ய கர்ப ஸ்ருஷ்டாரம் " (சிவபிரான்,பிரம்ம விஷ்ணு ருத்திரர்களை சிருஷ்டித்தவன் ) -பஸ்மஜாபால உபநிஷத்

5.
"ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமர வர ஸேவிதம் மாமேவ ஜ்யோதி : ஸ்வருபம் லிங்கம் மாமேவோபாஸித்வயம் " (பிரம்ம விஷ்ணு இந்திராதி தேவசிரேஷ்டர்களால் சேவிக்கப்பட்டு வரும் ஜோதிஸ்வரூபமான என்னையே  லிங்காகாரமாய் உபாசிக்க வேண்டும் ) - பஸ்மஜாபால உபநிஷத் 

இங்கு கொடுக்கப்பட்ட முதல் மூன்று உபநிஷதங்களில் விபூதியின் பெருமை விளக்கப்பட்டுள்ளது.இவ்வுலகில்,விபூதியை சின்னமாகக் கொண்ட ஒரே சமயம் சைவ சமயம் மட்டுமே .ஆக,விபூதியே முக்திக்கு வழி என்று ஜாபால உபநிஷத் கூறுவது,சைவ சமயத்தின் வழி ,அதன் சின்னங்களை அணிந்து,சைவ ஒழுக்கம் வழுவாமல் இருந்தால் மட்டுமே முக்தி கிட்டும் என்று கூறப்பட்டுள்ளது.ஆக,விபூதியைச் சின்னமாகக் கொள்ளாத வைணவம்,இஸ்லாம்,கிருத்தவம்,பௌத்தம் போன்ற மதங்களின் தெய்வமும் சிவனும் ஒன்று என்ற வாதம் அடிபடுகிறது.மேலும்,விபூதியை ஏற்காத இந்த மார்க்கங்கள் மூலம் முக்தி இல்லை என்பதும் ஜாபால உபநிஷத் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

அடுத்தது,திரிமூர்த்திகளான பிரம்ம,விஷ்ணு,ருத்திரரை சிவபிரானே படைத்தார் என்று கூறப்படுகிறது.மும்மூர்த்திகளைப் பற்றி இஸ்லாம்,கிருத்தவம் கூறவில்லை.மும்மூர்த்திக்கொள்கையை அவர்கள் ஏற்கவும் இல்லை.ஆக,எப்படி மும்மூர்த்திகளைப் படைத்த சிவனும்,மும்மூர்த்திக் கொள்கையை ஏற்காத இஸ்லாம்,கிருத்தவத்தின் தெய்வங்களும் ஒன்று ? நிச்சயமாக ஒன்று இல்லை.

கடைசி உபநிஷத்,தன்னை சிவலிங்கம் மூலம் வழிபட வேண்டும் என்று சிவபிரான் கட்டளையிடுகிறார்.சிவலிங்க வழிபாட்டை கிருத்தவம்,இஸ்லாம் ஏற்கவில்லை.ஆக,எப்படி சிவனும்,அல்லாவும்,ஏசுவும் ஒன்று ?

ஆக,வேதம் ஏக இறைவனாக கூறும் சிவனும்,இஸ்லாம் கிருத்தவத்தின் தெய்வங்களான அல்லாவும் ஏசுவும் ஒன்று அல்லர். அதனால்,வணங்கப்பட வேண்டிய ஒரே இறைவன்,சிவ பிரான் மட்டுமே.பிற மதங்களின் தெய்வங்களை வணங்கக்கூடாது.இதை அதர்வசிகா உபநிஷத் தெளிவாகக் கூறுகிறது :

"மற்றதெல்லாம் (பிற தெய்வங்களை வழிபடுவதை) விட்டுச்,சுகத்தைச் செய்பவராகிய  சிவனொருவரே தியானிக்கப்பட (வணங்கப்பட ) வேண்டியவர்"

சுருங்கச் சொல்ல வேண்டுமெனில்,28 சிவாகமங்களில் ஒன்றான சர்வோக்தம ஆகமத்தின்,உபாகமமான சிவதர்மோத்தர மொழிபெயர்ப்பில்,இவ்வாறு கூறப்படுகிறது :

"இவ்வாறெடுத்த உடம்பிலேயே இருளாகிய ஆணவ மலத்தின் சக்தியை நீக்கிப் பேரின்பத்தை வழங்குவதாய் சைவ  சாத்திரத்திற் சொல்லப்பட்ட மார்க்கங்களை  ஆய்ந்து உணராமல்,மலபந்தமுடையவரால் சொல்லப்பட்ட மேன்மையற்ற புன் சமயங்கள் சொல்லும் மார்க்கங்களை பொருளென மதித்து விரும்புகிறவர்கள், தமக்கெதிராய் அருகிலிருக்கும் நிறைந்த அமிர்தத்தை விட்டு, கூழை உண்ண விரும்புகிறவர்களுக்கு ஒப்பாவார்கள்.." - ( சிவதர்மோத்தரம் 10:9)

இறுதியாக,சாதாரண வழக்கில் விளக்க வேண்டுமெனில்,ஓர் உதாரணம் தருகிறேன்.இரண்டுப் பெண்கள் உள்ளார்கள்.முதலானவள்,தன் கணவனுக்கு மட்டுமே பணிவிடை செய்வாள்.பிற ஆண்களை சகோதரனாகவே பாவிப்பாள்.இரண்டாமவளோ," நான் திருமணம் செய்துக்கொண்டவரும் ஆண்,பக்கத்து வீட்டில் உள்ளவரும் ஆண்.இருவரும் ஆண் என்பதால்,இருவருமே எனக்கு கணவர்" என்ற கொள்கையுடன் இருப்பவள்.இவர்களில் முதலானவள் சைவர்களுக்கு உவமை.இரண்டாமவள்,எம்மதமும் சம்மதம் என்று கூறும் ஹிந்துக்களுக்கு உவமை.

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்