சிதம்பரத்து ஸ்ரீ ஞானப்பிரகாச ஸ்வாமிகள் - சைவத்தின் போர்வாள்

ஏக இறைவனான ஸ்ரீ பரசிவப் பிரபு அருளிய வேதம் மற்றும் சிவாகமங்கள்,இவற்றின் வழியில் வந்த இன்னும் பிற சைவ சாஸ்திரங்கள் மூலம் பரசிவ பிரபுவே அனைவரும் வணங்க வேண்டிய இறைவன் எனும் சத்யத்தை ஸ்தாபிக்க உருவானது இந்த இணையத்தளம்.சர்வம் சிவார்ப்பணமஸ்து ! சிவாத் பரதரம் நாஸ்தி !

Hot

Post Top Ad

Saturday, 16 July 2016

சிதம்பரத்து ஸ்ரீ ஞானப்பிரகாச ஸ்வாமிகள்


சிவமயம்

போர்துகிஸ்யர்கள் யாழ்பாணத்தை ஆக்கிரமித்து ஆட்சி புரியும் நாளில்,அந்த போர்துகிஸ்ய ஆட்சி தலைவன் உணவுக்கு ,யாழ்பாணத்து மக்கள் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு குடிகளும் ஒரு கொழுத்த பசுவை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர்..ஞானப்பிரகாசர் சுவாமிகளின் முறை வந்தபோது "நீசன் கொன்று சாப்பிடும் பொருட்டு,பசுவை கொடுப்பேனாயின்,அப்பசுவைக் கொல்லுதலாகிய பாவம் எனக்கு வந்தேய்துமே " என்று பயந்து, அப்பயம் காரணமாக ஒருவருக்கும் தெரிவியாது இராத்திரிக் காலத்திலே, புறப்பட்டு இத்தேசத்தை விட்டுச் சிதம்பரத்துக்குச் சென்றனர்..அந்த ஸ்தலத்திலேயுள்ள சிவ தீர்த்தமாகிய சிவகங்கையிலே ஸ்நானம் பண்ணி,மிளகும் சுத்த ஜலமும் சாப்பிட்டுக் கொண்டு, நாற்பத்தைந்து நாள் சிவகாமி அம்மை சந்நிதானத்திலே அவ்வம்மையாரை உபாசித்துக்கொண்டிருந்தனர்..பின்பு,சிவகாமி அம்மையுடைய திருவருளைப் பெற்றுக்கொண்டு உத்தரதேசத்திலுள்ள (வட நாடு​) கௌட தேசத்திற்கு (வங்காளம்) சென்றார்...

அங்கே ஒரு பிராமண சந்நியாசி தினந்தோறும் சில பிள்ளைகளுக்குத் தர்க்கம்,வியாகரணம்,மீமாஞ்சை முதலியவைகளைப் படிபித்து,வேத அத்தியயனமும் சொல்லை வைப்பார்...ஞானப்பிரகாச சுவாமிகள் நியமமாகப் போய்,தூரத்திலே நின்று அவற்றைக் கேட்டுத் தம் மனத்திலே அமைத்துக்கொள்ளுவார்..சூத்திரரோடு (வேளாளர்) பேசுதல் பிராமண சந்நியாசிகளுக்கு விலக்காதலால், அச்சந்நியாசி இவருடன் ஒன்றும் பேசாது விடுவார்..இப்படியிருக்குங் காலத்தில்,ஒரு நாள் அச்சந்நியாசியானவர் தம் மாணாக்கரைப் பரீக்ஷித்தார்..பரீக்ஷித்த பொழுது,அவர்கள் அவர் வினாவிய வினாக்களுக்கு ஏற்ற விடை சொல்லாது நின்றார்கள்..அப்பொழுது,நியமமாக தம் மாணாக்கரினும் மிக்க கவனத்தோடு தாம் சொல்லியவற்றை கேட்டிருந்தவராகிய சிவப்பிரகாச சுவாமிகள்,அவைகளைத் தம் மனசிலே பதித்து வைத்திருப்பார் என்று தம்முள்ளே சந்நியாசியானவர் நினைத்து,இவரை அழைத்து , "நீ இங்கு வந்த நாள் முதலாகக் கேட்டவைகளைச் சொல்லு" என்றார்..உடனே சுவாமிகளவர்களெல்லாரும் அதிசயிக்கும்படி தாம் கேட்டு அமைத்தவைகளைச் சொல்லினார்..அப்பொழுது அப்பிராமண சந்நியாசி ஞானப்பிரகாச சுவாமிகளைப் பார்த்து, "நீயே பிராமணன்" என்று சொல்லி,அவருக்குத் தர்க்கம்,வியாகரணம் முதலிய நூல்களைக் கிரமமாக படிபித்து ,,"நீ தமிழ் நாட்டிற் சென்று அங்குள்ளவர்களுக்குப் பிரயோசனப்படுபவனாயிரு" என்று கட்டளையிட்டார்..சுவாமிகள் அக்கட்டளையைச் சிரசின்மேல் வகித்து,அவரிடத்தில் விடை பெற்றார்..

அதன் பிறகு தெட்சணத்திற்கு வந்து,திருவண்ணாமலை ஆதீனத்திலே காவி பெற்று அங்கேயிருக்கும் காலத்திலே, சித்தாந்த நூல்களை வாசித்தலில் இடையறா முயற்சி கொண்டிருந்தார்.. அதபின்,அந்த ஸ்தலத்தை விட்டு நீங்கி,சிதம்பரத்துக்கு வந்தார்..அங்கேயிருக்கும் காலத்தில், பௌஷ்கர ஆகம விருத்தி,சிவஞானபோத விருத்தி,சித்தாந்த சிகாமணி,பிரமாண தீபிகை,பிரசாத தீபிகை,அஞ்ஞான விவேசனம்,சிவயோகசாரம்,சிவயோக ரத்னம்,சிவாகமாதி மாகான்மிய சங்கிரகம் போன்ற நூல்களை சம்ஸ்கிருதத்திலும்  சிவஞான சித்தியார் உரை என்ற நூலை தமிழிலும் அருளினார்..சிதம்பரத்தில், "ஞானப்பிரகாசம்" என்ற திருக்குளமும் அவரால் அமைக்கப்பட்டது..பின்னர்,சிதம்பர ஸ்தலத்திலேயே சுவாமி தரிசனம் செய்துக்கொண்டிருந்து சிவபதமடைந்தார்..

இவர் ,சிவஞான சித்தியார் என்ற சித்தாந்த சாத்திரத்துக்கு இயற்றிய உரை,சிவசமவாத கருத்துக்களை உடையது என்பதால்,திருக்கயிலாய குருபரம்பரை ஆச்சாரியர்களால் அவ்வுரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை...இருப்பினும்,நாம் ஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகளுக்கு மிகவும் கடமைபட்டுள்ளோம்...பல சித்தாந்த கருத்துடைய நூல்களை நமக்கு அருளிய மாமனிதர் இவர்....இவரை போற்றி வணங்குவோமாக...

*குறிப்பு : சிவசமவாதம் என்பது அகச் சமயங்களில் ஒன்று... சைவ சமயத்தின் ஒரு பிரிவு தான் சிவசம வாதம்..சைவ சித்தாந்தத்தில் கண்டிக்கப்பட்ட பல சமயங்களில் ஒன்று சிவசம வாதம்...

ஆதாரமாகக் கொள்ளப்பட்ட நூல் :
1.  வே.கனகரத்தின உபாத்தியாயரின்  "ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம்"  
2.   த.கைலாசபிள்ளையின்  "ஆறுமுக நாவலர் சரித்திரம்"


சித் சபேசா : சிவ சிதம்பரம் !!!

No comments:

Post a Comment

சைவ க்ஷத்திரியத்வம்

சைவ க்ஷத்திரியத்வம்