சிவபாத சேகரன்
December 12, 2016
0
|| சிவாத்பரதரம் நாஸ்தி ||
சிலர்,பகவத் கீதையில் சுட்டிக் காட்டப்படும் இறைவன் விஷ்ணு என்று கூறுகின்ரனர்.ஆனால் இவர்கள் கூற்றுக்கு அந்த பகவத் கீதையே ஆதாரமாக இருக்க மறுத்துள்ளது.ஆம்,பகவத் கீதையில் கூறப்படும் இறைவன் உண்மையில் சிவபிரானேயாம்.பகவத் கீதையைக் கொண்டே இந்த உண்மையைப் பார்ப்போம் :
"அர்ஜுனா ! இயந்திரத்தில் ஏறிய பதார்த்தங்களென,எல்லா உயிர்களையும் மாயா சக்தியால் சுழற்றிக்கொண்டிருக்கும் ஈஸ்வரன் எல்லா உயிர்களின் இதயத்திலும் இருக்கிறான்" - (18:61)
"அர்ஜுனா ! அந்த ஈஸ்வரனையே எல்லாத் தன்மையாலும் சரணமாக அடை : அந்த ஈஸ்வரானுக்ரஹத்தால் உத்தமமான சாந்தியையும் நித்யாஸ்தானத்தையும் அடைவாயாக" - (18:62)
இந்த இரு வசனங்களால்,தனக்கு இறைவனாக விளங்கும் ஈஸ்வரன் எனும் பெயர்க்குரிய விஸ்வரூப சிவனையே சரணம் அடைவாயாக என்று அர்ஜுனனுக்கு அறிவுரைக் கூறினார்.ஸ்ரீ க்ருஷ்ணர்,சிவஹொம்பாவன யோகத்தில் இருந்து நீங்கி,ஜீவ நிலையில் உள்ளபோது,அர்ஜுனன் கேட்கும் கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்.இதே போல் , பகவத் கீதை,8ஆம் அத்தியாயம்,முதல் ஸ்லோகத்தில்,அர்ஜுனன் "கிம்தத்ப்ரஹ்ம" (அந்த பிரம்மம் யாது ?) என்ற வினவிய போது, அதே அத்தியாயம்,மூன்றாம் ஸ்லோகத்தில் " அக்ஷரம் ப்ரஹ்ம பரமம்" (அழிவற்ற உத்தமமானது பிரம்மம்) என்று விடையளிக்கிறார்.இங்கு "நானே உத்தமமான" பிரம்மம் என்று க்ருஷ்ணர் கூறவில்லை என்பதை கவனிக்க.
இப்படி சிவஹொம்பாவ யோகத்தில் இருந்து நீங்கியபோது, படர்க்கையிலும், சிவஹொம்பாவன யோகத்தில் ஆழ்ந்திருக்கும்போது, தன்னிலையிலும் க்ருஷ்ணர் பதிலளிக்கிறார்.அவர் சிவஹொம்பாவனையில் இருந்தபோது, அபேத நிலையில் இருந்தபடியால் தன் ஆன்மாவை சிவனாகக் கருதி விடையளிக்கிறார்.சிவஹொம்பாவன யோகத்தில்,ஆன்மாவை சிவமாகக் கருதி அகப்பூசை செய்ய வேண்டும் என்பது மரபு.இதில் கைத்தேர்ந்த க்ருஷ்ணர்,அந்நிலையில் சிலசமயம் அர்ஜுனருக்கு பதிலளிக்கிறார்..
தனது சிவஹொம்பாவன நிலையை இந்த இரண்டு பகவத் கீதை வசனங்கள் மூலம் காட்டுகிறார் :
1. " எனது பரத்வம் அறியாத மூடர்கள் பூதமஹேஸ்வரனாக இருக்கும் என்னை மனிததேகத்தை ஆச்சிரயித்து இருப்பவனாக என்னை அவமதிக்கிறார்கள்" - (9:11)
2. "யாதவருள் க்ருஷ்ணனாகவும்,பாண்டவருள் அர்ஜுனனாகவும் இருக்கிறேன்" - (10:37)
இந்த வசனங்களால்,க்ருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் மேன்மை,மஹேஸ்வர விபூதியினால் என்று அறிக..சிவஹொம்பாவனையில் உள்ளவர் நாவிலி இருந்து "நானே பிரம்மம்" போன்ற வார்த்தைகள் வருவதால்,அவர்கள் தான் பிரம்மம் என்று சொல்லக் கூடாது.அவர்களுள் உள்ள சிவபிரானின் சொற்களாம் அவை.இது எது போல் எனில்,பேய் பிடித்தவன் சொல்லும் சொற்கள்,அவனது அல்லவாம்,பேயுடையதாம்..அதே போல்,சிவஹொம்பாவனா யோகத்தில் உள்ளவர் உதிரும் சொற்கள்,சிவபிரானின் சொற்களாம்.
இதே போல்,ப்ருஹதாரண்யக உபநிஷத் ,3ஆம் அத்யாயத்தில்,
"பிரம்மமாகிய இதனை அறிந்த வாமதேவ ருஷியானவர்,நான் மநு ஆனேன்;சூரியன் ஆனேன் என்றார்" என்று வருவதால், வாமதேவ ருஷி,க்ருஷ்ணர் போன்றொர் சிவஹொம்பாவன யோகத்தில் கைத்தேர்ந்தவர்கள் என்று நாம் அறியலாம்.ஆதலால் இவர்கள் "நானே ப்ரம்மம்" என்று கூறுவதால் இவர்கள் பிரம்மம் ஆகுவதில்லை,மாறாக அப்பொழுது இவர்களுள் விசேஷமாக எழுந்தருளியிருக்கும் பரசிவத்தின் வாக்யங்களேயாம்.
இவ்வாறே பகவத் கீதைக்கு பொருள்கொள்ள வேண்டும்.இல்லையேல் சுத்த அபத்தமாய் முடியும்.



